CAA, NRC-க்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம் (வீடியோ)

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணாநகரில் பள்ளிவாசல் கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 32 பள்ளிவாசல்களை சேர்ந்த ஏராளமானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தஸ்லீம் ஜமாஅத்துடன் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து கைகளில் கருப்பு பட்டை அணிந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#CAA_ NRC_ Protests Organized By Vaniyambadi People #IndiaAgainstCAA_NRC

சமூகநீதி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்த காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினர்.

கரூரில் அனைத்து ஜமாத்துகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் நகரில் உள்ள 14 பள்ளிவாசல்களில் உள்ள ஜமாத்துக்கள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தினர்.

இதேபோல் அரியலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இசுலாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதிமுக எம்பிக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் உலமா சபை சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனால் மேலப்பாளையம் பகுதி முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் வணிக வளாகங்கள் கடையடைப்பு செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த், திராவிட கழகத்தினர் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே