ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

14-ஆவது ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் முதன்முறையாக நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட 292 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ஹர்பஜன் சிங் மற்றும் கேதார் ஜாதவ் ஆகிய 2 இந்திய வீரர்களுக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், ஜேசன் ராய், மார்க் உட் ஆகிய 7 வெளிநாட்டு வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐபிஎல்லில் முன் எப்போதும் இல்லாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதனால் இம்முறை அணியை வலுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

இந்நிலையில் கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை சிஎஸ்கே விடுவித்துள்ளது.

ராஜஸ்தான் அணியிலிருந்த ராபின் உத்தப்பாவை சென்னை அணி சேர்த்துக்கொண்டுள்ளது. மேலும் மேக்ஸ்வெல் மற்றும் மொயீன் அலியை ஏலத்தில் எடுக்க சென்னை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் 19 கோடியே 90 லட்சம் ரூபாய் மட்டுமே கையிருப்பு தொகை உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரை மாற்றிக்கொண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் அதிகபட்ச கையிருப்பு தொகையாக 53 கோடியே 20 லட்சம் ரூபாய் உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் இந்த ஏலம் நாளை மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ஏலத்தில் தமிழகத்திலிருந்து ஷாருக் கான், சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், எம்.முகமது ஆகிய வீரர்கள் போட்டியில் உள்ளனர்.

இவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே