சேலம் தலைவாசலில் பிரமாண்ட கால் நடைப்பூங்கா – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் சேலம் மாவட்டத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 900 ஏக்கர்  பரப்பரவில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த திட்டம் அறிவிக்கும் போதே கால்நடை பூங்காவில் எந்தவிதமான வசதிகள் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது கால்நடை பூங்காவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் எந்தவித வசதிகள் செய்யப்பட இருக்கிறது என்பது தொடர்பாக முதலமைச்சரிடம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விளக்கி வருகின்றனர்.

அந்த அடிப்படையில் மூன்று பிரிவுகளாக இந்த கால்நடை பூங்காவானது அமைக்கப்பட உள்ளது.

முதலாவது பிரிவில் நவீன வசதி கொண்ட கால்நடை பூங்கா அமைக்கப்படவுள்ளது.

இரண்டாவது பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை போன்ற பொருட்களை பாதுகாத்து  பதப்படுத்தவும், அவற்றில் இருந்து பல்வேறு உபபொருட்களை தயார் செய்யவும், மேலும் அவைகளை சந்தை படுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கான பயிலரங்கத்துடன் கூடிய பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் விரிவாக கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக உலகத்தரம் வாய்ந்த இந்த வளாகத்தில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதுமட்டுமின்றி உரை விந்து உற்பத்தி நிலையம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த கால்நடை பூங்கா அமைப்பதற்கான முன் சாத்தியக்கூறு, ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கால்நடை பூங்கா அமைப்பது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே