உளவு பார்க்கும் பெகாசஸ் மென்பொருளால் இந்தியாவில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்துள்ளது.
உலகம் முழுவதும் ஆயிரத்து 400 பேரின் வாட்ஸ்அப் தகவல்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியர்களின் வாட்ஸ்அப் தகவல்களும் உளவு பார்க்கப்பட்டது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
அதில் இந்தியாவில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. ஆனாலும் 20 பேரின் வாட்ஸ்அப் தகவல் மட்டுமே உளவு பார்க்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் எந்த மாதிரியான தகவல் திருடப்பட்டது என்பது பற்றி கண்டறிய முடியவில்லை என்றும் ஃபேஸ்புக் கூறி உள்ளது.
மிகவும் சிக்கலானதும், நுட்பமானதுமான இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சிலரே இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர் பாதிக்கப்படக் கூடிய அளவுக்கு பாதுகாப்பு மீறல் இல்லை என்று மத்திய அரசிடம் பேஸ்புக் தெரிவித்துள்ளது.