பாகிஸ்தானில் 30 சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை இன்று ஒன்றரை சதவீதமாக குறைந்து விட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹெச்.ராஜா, பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தில் மதக் கண்ணோட்டம் எதுவும் இல்லை எனவும் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்.
1950ஆம் ஆண்டு கையெழுத்தான நேரு-லியாக்கத் ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் அரசு மீறியுள்ளதாகவும், பாகிஸ்தானில் இந்துக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், அங்கிருந்து விரட்டப்பட்டதாகவும் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.
இதனால் பாகிஸ்தானில் 30 சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை இன்று ஒன்றரை சதவீதமாக குறைந்துவிட்டது என்றும் எச் ராஜா கூறினார்.
போரில் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த திமுகவுக்கு அவர்கள் குடியுரிமை சட்டத்தால் பாதிக்கப்படுவதாக கூற தகுதி இல்லை எனவும்; திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழின விரோத கூட்டணி எனவும் அவர் விமர்சித்தார்.