ரஜினி உடன் இருப்பதே எனது நிலைப்பாடு – அர்ஜூன மூர்த்தி

அதீத நம்பிக்கை, அன்பு காரணமாக ரஜினியுடன் இணைந்து செயல்பட்டதாக, ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட அர்ஜூன மூர்த்தி கூறினார்.

சென்னையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரஜினி அரசியலில் இருந்து விலகும் முடிவை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்கிற வருத்தம் ரஜினிக்கு உள்ளது.

எனவே ரஜினி கொஞ்ச நாள் ஓய்வு எடுப்பது நல்லது. ரஜினி கட்சித் தொடங்கவில்லை என்றாலும், அவருடன் இணைந்து பயணிப்பேன். கட்சி தொடங்கவில்லை என்றாலும், மக்கள் சேவையில் இருப்பேன் என ரஜினி கூறியுள்ளார். 

எனவே எந்த சூழலிலும் அவருடன் இருப்பதே எனது விருப்பம் எனவும் அர்ஜூன மூர்த்தி தெரிவித்தார்.

ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பதால், திரும்பவும் நான் பாஜகவுடன் செல்லப்போவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்றும் கூறினார்.

அந்த கட்சியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.

எனது அனுபவம் இளைஞர்களுக்கு பயன்பட வேண்டும் என நினைத்தேன். எனவே எனக்கு பாஜகவில் சேர்ந்தேன். அதேநேரத்தில், ரஜினி கட்சி தொடங்கியதால் அவருடன் இணைந்து பயணித்தேன்.

ரஜினி உடனடியாக இந்த முடிவை எடுக்கவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைபடிதான் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே ரஜினிகாந்த் முடிவை சந்தேகப்பட வேண்டாம்.

நான், ரஜினிகாந்தை தவத்திரு ரஜினிகாந்த் என்றுதான் சொல்வேன். அந்த அளவுக்கு மென்மையானவர் என்றும் குறிப்பிட்டார்.

எங்களுக்குத் தெரியப்படுத்தாமல் இந்த முடிவை எடுக்கவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைகளை எங்களோடு பகிர்ந்து கொண்டார்.

மிகவும் வெளிப்படையாக இருப்பவர்.

தமிழக மக்களுக்கு எப்போதுமே நல்லது செய்ய வேண்டும் என நினைத்தவர்.

எனவே ரஜினிகாந்தின் முடிவை குறைத்து மதிப்பிடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

தேர்தல் சமயத்தில் ரஜினி எந்த கட்சிக்காவது ஆதரவு கொடுப்பாரா என்கிற கேள்விக்கு, பாஜக அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும், ரஜினி குரல் கொடுப்பது குறித்து ரஜினி மனதில் ஒரு சொல் கிடைக்கும். அந்த கணத்தில் என்ன நினைக்கிறாரோ அதை செய்வார்.

எனவே அது குறித்து முன்பே, பின்போ சொல்ல முடியாது என குறிப்பிட்டார். கடந்த 20 நாட்களில் அவரது ரசிககர்களுடன் நெருங்கி பழகியதில், ரஜினிக்கு மிகப்பெரிய அன்பு கொண்ட சேனையாக ரஜினி மக்கள் மன்றம் உள்ளதாக கூறினார்.

ரஜினி மனது அமைதியாகும் வரை அவருடன் பயணிப்பேன். ரஜினி திடமாக இருக்கிறார், மருத்துவர் ஆலோசனையை கேட்ட வேண்டிய நிலையில் உள்ளார். எனவே அவருடைய முடிவை மதிக்க வேண்டும் என குறிப்பிட்டார் .

தமிழக அரசியலை விட்டே தமிழருவி மணியன் போவது வருத்தம். ஆத்மார்த்தமாக பேசக்கூடியவர். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என நினைத்த மனிதர் என்றும் அர்ஜூன மூர்த்தி குறிப்பிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே