“சொத்துரிமை” மட்டுமல்ல..; பெண்களுக்கான இன்னும் சில சட்டங்கள் இதோ..!!

பெண்களின் உரிமையை பாதுகாக்க ஏராளமான சட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றது. ஆனால் பெண்கள் பலர் அவர்களின் உரிமைகளைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். பணிபுரியும் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் குடும்பத்தை கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பயனுள்ள சட்டங்கள் பல இருக்கிறது. இந்த பதிவில் பெண்களுக்கு தெரியாத சில சட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.

சொத்துரிமை

பெண்களுக்கு திருமணம் செய்யும்போது ஏராளமான நகைகள் மற்றும் சீர் செய்வதால் குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு கொடுக்க மாட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும் பெண்களுக்கும் ஆண்களைப் போலவே சமமாக சொத்துரிமையும் வாரிசுரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்று 1929இல் பெரியார் கூறினார்.

அதில் இருந்து 60 வருடங்கள் கடந்து 1989ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்கள் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு எனும் சட்டத்தை நிறைவேற்றினார்.

அதுமட்டுமில்லாமல் கணவன் சொத்திலும் பங்கு கேட்கும் உரிமை பெண்களுக்கு இருக்கிறது. முறையாக விவாகரத்து செய்யாமல் ஒரு பெண்ணின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அவரது சொத்தை முதல் மனைவி மட்டுமே உரிமை கொண்டாட முடியும்.

இந்து திருமண சட்டம் 1955

திருமண வாழ்க்கை என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைவது கிடையாது சிலருக்கு அதுவே சாபமாக மாறி விடுகிறது முக்கியமாக திருமணத்திற்குப் பிறகு தனக்கு நடக்கும் கொடுமைகளை பெண்கள் வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள். எல்லாம் நமது தலையெழுத்து என்று கொடுமைகளை பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர்.

சிலர் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் சட்டம் அவர்களுக்கும் சில உரிமைகளை கொடுத்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் அனைத்து உரிமையும் பெண்களுக்கு இருக்கிறது. கணவன் இறந்து விட்டாலோ அல்லது விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தாலோ அவர்கள் எங்கு தங்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருக்கிறது.

அவர்கள் விரும்பும் வரை புகுந்த வீட்டிலேயே அவர்களால் தங்க முடியும். திருமணத்தின்போது சீதனமாக கொண்டு வந்த அனைத்தையும் பெண்கள் சட்டபூர்வமாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு இந்து வாரிசு சட்டம் 1956 14 பிரிவின் கீழும் இந்து திருமண சட்டம் 1955 27 பிரிவின் கீழும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

அதே போன்று பெண்களுக்கான உரிமை மறுக்கப்படும் போது பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டம் 19ஏ படி புகார் அளித்து நடவடிக்கை எடுக்க முடியும். விவாகரத்திற்கு பிறகு ஐந்து வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தையை தானே வைத்துக் கொள்ள பெண்களுக்கு உரிமையை கொடுக்கிறது சட்டம்.

இந்து திருமண சட்டம் 1995 பிரிவு 13

நம்பிக்கை துரோகம், உடலளவில் துன்புறுத்துதல் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் விவாகரத்து பெற உரிமை உள்ளது. இந்து திருமண சட்டம் 1995 பிரிவு 13 இன் கீழ் கணவரின் ஒப்புதல் கூட இந்த விவாகரத்திற்கு தேவையில்லை. இந்திய தண்டனை சட்டம் 125 பிரிவின்படி அந்தப் பெண்கள் வாழ்வதற்கும் தங்கள் குழந்தையை பாதுகாப்பதற்கும் கணவனிடமிருந்து தேவையான பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால் புகுந்த வீட்டின் அனுமதி இல்லாமல் கருத்தரித்து இருபத்தி நான்கு வாரத்திற்குள் கருத்தரிப்பு தொடர்பான மருத்துவ சட்டம் 1971-ம் கீழ் கருக்கலைப்பு செய்யலாம்.

வரதட்சணை தடுப்பு சட்டம்

புகுந்த வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தால் வரதட்சணை தடுப்பு சட்டம் 1961 34 பிரிவு மற்றும் இந்திய தண்டனை சட்டம் 498 ஏ பிரிவில் புகார் அளிக்க பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த சட்டத்தின் காரணமாக தான் வரதட்சணைக் கொடுமைகள் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வன்கொடுமை தடுப்பு சட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த குற்றங்களுக்கான சட்டங்கள் பற்றி பெண்களுக்கு கண்டிப்பாக விழிப்புணர்வு இருக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 100 இன் படி கடத்த முயற்சிக்கும் போதும் பாலியல் ரீதியாக தாக்கும் போதும் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கொலை செய்தால்கூட அது குற்றமாக கருதப்படாது.

சேவை பெறும் உரிமை சட்டம்

இந்த சட்டத்தின் படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் அவருக்கு தேவையான சட்ட உரிமையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். நீதிமன்றமே அந்த பெண்ணிற்காக வாதாட வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து கொடுக்கும். பெண்ணின் உடல் பாகங்களை அவரது மனம் புண்படும்படி வர்ணித்து பேசினால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். அதனை கண்டித்து அந்தப் பெண் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்க உரிமை இருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 498

வீட்டில் இருக்கும் பெண்கள் யாராக இருந்தாலும் அவர்களை வாய்மொழியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ துன்புறுத்தினால் ஜாமீனில் வெளியில் வர முடியாத படி 3 வருடத்திற்கு அபராதத்துடன் கூடிய தண்டனை கிடைக்கும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் அடையாளங்களை வெளியில் கூற வேண்டிய அவசியம் இல்லை.

இந்திய தண்டனை சட்டம் 354 டி

இந்த சட்டத்தின் படி ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல் அவரைப் பின் தொடர்ந்தாலும் அல்லது பேச முயற்சித்தாலும் அவர் மீது புகார் அளிக்க பெண்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்தில் பெண்களின் அனுமதி இல்லாமல் அவர் பற்றிய தகவல்களை யாரேனும் எடுத்தால் அவர்கள் மீதும் பெண்கள் புகார் அளிக்க உரிமை இருக்கிறது.

பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்

பணிபுரியும் இடத்தில் ஆண்களால் பாலியல்  தொல்லைக்கு பல பெண்கள் ஆளாகின்றனர். அதுபற்றி புகார் அளித்தால் நமது வேலை இல்லாமல் ஆகி விடும் என்று பயந்து பெண்கள் இதனை யாரிடமும் கூறாமல் வேறு வேலைக்கு சென்று விடுகின்றனர். ஆனால் இது போன்ற தொல்லைகள் இருந்தால் அந்த நபர் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க பெண்களுக்கு உரிமை இருக்கிறது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் இன்டர்ணல் கம்ப்ளைன்ட் கமிட்டி (Internal Complaint Committee) என்ற ஒன்று நிச்சயமாக இருக்கும். அந்தக் கமிட்டியில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க வேண்டும். அதை அந்த நிறுவனம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.

ஸீரோ எஃப்ஐஆர் (Zero FIR)

பெண்களுக்கு ஸீரோ எஃப்ஐஆர் உரிமை இருக்கிறது. ஏதேனும் அநீதி நடந்தால் அதை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என்று கிடையாது. எந்த காவல் நிலையத்திலும் அவர்கள் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்.

ஒரு பெண் குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தால் அந்தப் பெண்ணின் மீது  பரிசோதனை செய்ய வேண்டியிருந்தால் அதை மற்றொரு பெண் தான் செய்ய வேண்டும். அதேபோன்று தவிர்க்க முடியாத சில வழக்குகளை தவிர மற்ற வழக்குகளுக்கு ஒரு பெண்ணை கைது செய்ய வேண்டுமென்றால் நீதிபதியின் அனுமதி இல்லாமல் இரவு நேரத்தில் கைது செய்ய முடியாது.

பெண்ணுரிமையே ஒரு சமூகத்தின் விடுதலை என்று கூறியவர் தந்தை பெரியார். அதனால் பெண்கள் தங்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் சட்டத்தை சரியாக பயன்படுத்தி அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே