“ஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்” : அறிமுகம் செய்தது மத்திய அரசு

வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்கி தமிழக அரசு சேவை ஆற்றி வரும் நிலையில் “ஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்” விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது மத்திய அரசு.

2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தது பாஜக. அதனை நிறைவேற்றும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5500 ஜன் ஆஸாதி கேந்திரங்கள் மூலம் ஒரு ரூபாய்க்கு நாப்கின் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது மத்திய அரசு. தற்போது வெளிச்சந்தையில் ஒரு சானிடரி நாப்கின் 6 முதல் 8 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனை வாங்கி பயன்படுத்த முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர். 2015-2016 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 58 சதவீதம் பேர் சுகாதாரமற்ற துணிகளை நாப்கின்களாக பயன்படுத்துகிறார்கள்.

மேலும் சுகாதாரமான நாப்கின்கள் கிடைக்காததால் ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி பெண்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவதாக மத்திய அமைச்சர் மன்சூப் மான்வியா தெரிவித்திருக்கிறார். எனவே பெண்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசின் மருந்தகமான ஜன் ஆஸாதி கேந்திரங்களில் இதுவரை 4 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இனி ஒரு நாப்கின் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தற்போது மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த நாப்கின்கள் தானாக மக்கும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில் மட்டும் ஜன் ஆஸாதி கேந்திரங்கள் மூலமாக 2.2 கோடி நாப்கின்கள் விற்பனையாகி இருக்கும் நிலையில் இனி இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 2012ம் ஆண்டே வளர் இளம் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதன் மூலம் 40 லட்சம் இளம்பெண்கள் 7 லட்சம் பிரசவித்த தாய்மார்கள் 700 பெண் கைதிகள் மற்றும் மனநல மருத்துவமனைகளில் உள்ள 500 பெண் நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.

பெண்களின் சுகாதாரத்தைப் பேணுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தை போலவே தற்போது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் காலங்களில் சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது.

வெகு விரைவில் இந்தியா முழுக்க அனைத்து பெண்களுக்கும் இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி 100% பெண்களின் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே