டெல்லியில் நிலவும் கடும் புகை மாசுபாடு : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

டெல்லியில் காற்றுமாசு அதிகரித்ததன் எதிரொலியாக நவம்பர் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் பொது சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியதுடன், இம்மாதம் 5ம் தேதி வரை கட்டிட வேலைகளை தொடரவேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் வரும் 5ம் தேதி வரை டெல்லி, ஃபரிதாபாத், குருகிராம், காஜியாபாத், நொய்டா ஆகிய பகுதிகளில் கட்டிடப்பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிலக்கரி மற்றும் எரிப்பொருள் சார்ந்த பணிகளை 5ம் தேதிவரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியன்று பட்டாசு வெடித்ததாலும், அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாய பதர்களை எரிப்பதாலும் டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஒரே நாளில் டெல்லியின் காற்றுமாசு தரக்குறியீட்டில் 480 புள்ளிகளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே