ராமச்சந்திர குஹா கைது குறித்து மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் கண்டனம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.

கர்நாடாக மாநிலம் பெங்களூரு மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் காலையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் நடைபெறவுள்ளதை அறிந்த காவல்துறையினர் நேற்றே இந்தப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்தநிலையில், இன்று காலையில் நடைபெற்ற போராட்டத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கலந்துகொண்டார்.

அவரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவர் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில் ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டவர்களை கைது செய்வதன் மூலம் சத்தியா கிரக போராட்டத்தை எரியூட்டும் அரசின் முட்டாள் தனமான செயலை நான் கைத்தட்டி வரவேற்கிறேன்.

அதேநேரத்தில் அவர்களுடனை பாதுகாப்பின் மீது நான் அக்கறைக் கொள்கிறேன். இந்தியா அவர்களுடன் இணைந்து நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே