மூன்று மாவட்டங்களில் கனமழை…!

நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று காலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்த நிலையில், இரவிலும் அவ்வப்போது கனமழை தொடர்ந்தது.

காஞ்சிபுரத்தில் பாலுசெட்டி சத்திரம், செவிலிமேடு, ஓரிக்கை, வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் மாலை நேரத்தில் திடீரென கனமழை கொட்டியது.

சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சற்று பாதிப்புக்கு ஆளாகினர்.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வயல்களில் தேங்கிய நீர் வடிய வாய்ப்பில்லாமல் சம்பா நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீர்காழியை அருகே கடைக்காடு கிராமத்தில் தொடர் மழையால், 25க்கும் மேற்பட்ட சுனாமி வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

மேல்தள பூச்சுகள் இடிந்து விழுவதால் மக்கள் தூக்கமின்றி இரவை கழித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், வள்ளியூர், களக்காடு சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று பிற்பகல் வரை இடைவிடாமல் மழை பெய்தது.

குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சூழல் நிலவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 60 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே