தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழையும், நாளை 5 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுவதால், கோவை, நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றார்.
அதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றார். சேலம், கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.