தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது – உயர்நீதிமன்றம் கருத்து..!

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது, பீஹார் போல மாறி வருகிறது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருகிறது. குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கிறார்கள். இது சரியல்ல, பீஹார், ஜார்கண்ட்டில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் வருகின்றன என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இதுபற்றி டிஜிபியிடம் தெரிவிப்பதாகக் கூறினார்.

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விட்டு விட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தி கொள்ளையடித்ததாக பீஹாரைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், நாட்டு துப்பாக்கி பீஹாரில் இருந்து வந்திருக்கின்றன, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெதுவாக பரவி வருகிறது.

இது நாட்டுக்கும், மாநிலத்திக்கும் நல்லதல்ல. பீஹார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர், தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, மற்றும் சென்னை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள்,

*உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி கொள்ளையடித்ததாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

*வட மாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிள் எளிதாக கிடைக்கிறதா?

*சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்?

*வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?

*தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது?

*உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுளனர்?

*ரவுடி கும்பல் துப்பாக்கிகள் பெற்று கொலை, கொள்ளை, நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுபடுகின்றனரா?

*நக்ஸல்கள், சமூக விரோதிகளும், ஆயுதங்களை வைத்து சட்டம் -ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா?

என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே