LATEST NEWS : மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் : உயர்நீதிமன்றம்

மெரினா கடற்கரையை 6 மாதங்களுக்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை 6 மாதங்களுக்குள் உலகத்தரத்துக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

கடற்கரையில் உள்ள கடைகள், கடற்கரையின் அழகை மறைக்கும் வகையில் உள்ளதால், அவற்றை கடற்கரை நோக்கி நேர்வரிசையில் அமைக்க வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

விதிகளை மீறி செயல்படும் கடைகளை தேவைபட்டால் கட்டாயப்படுத்தி அகற்றலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மெரினாவை சுத்தமாக வைப்பது குறித்து டிசம்பர் 13-ம் தேதிக்குள் பதிலளிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே