திருட்டு பயம் காரணமாக பழைய பேப்பர் கட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்த 15 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை கவனக்குறைவாக பெண் ஒருவர் எடைக்குப் போட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராசிபுரம் போலீஸார் விரைந்து செயல்பட்டு நகையை மீட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல். கட்டிட பொறியாளர். இவரது மனைவி கலாதேவி (44), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ம் தேதி மதியம் அப்பகுதி வழியாக சென்ற பழைய பேப்பர்கள் வாங்குபவரிடம் கலாதேவி, வீட்டில் இருந்த பழைய பேப்பர், நோட்டுப் புத்தகம், பிளாஸ்டிக் டப்பா உள்ளிட்ட பொருட்களை எடைக்கு போட்டுவிட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக்கொண்டார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, திருட்டு பயம் காரணமாக பழைய பேப்பர்களுக்கு நடுவே தனது 15 பவுன் தாலிக்கொடி, வளையல், வைரத்தோடு போன்றவற்றை வைத்திருந்தது கலாதேவிக்கு நினைவுக்கு வந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் அக்கம், பக்கத்தினரிடம் பழைய பேப்பர் வியாபாரி குறித்துவிசாரித்து தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு பேருந்து நிலையம், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை ஆகிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தனர்.
மேலும், ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து பழைய பேப்பரை கலாதேவியிடம் வாங்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சேலம் விரைந்த ராசிபுரம் போலீஸார் சீலநாயக்கன்பட்டி அருகே ராமன் காட்டில் உள்ள செல்வராஜ் (55) என்ற பேப்பர் கடைக்காரரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், பழைய பேப்பர் கட்டுக்குள் நகை பெட்டகங்கள் இருந்ததைக் கூறியுள்ளார். அதில் ஏழரை பவுன் தாலிக்கொடி, 4 பவுன் வளையல், வைரத்தோடு 2 செட் உள்ளிட்டவை இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவற்றை போலீஸார் மீட்டு கலாதேவியிடம் ஒப்படைத்தனர்.
நகைகளை திரும்ப ஒப்படைத்த பேப்பர் வியாபாரி செல்வராஜை பாராட்டி கலாதேவி குடும்பத்தினர் ரூ.10 ஆயிரம் பரிசளித்தனர். துரித நடவடிக்கை மேற்கொண்ட ராசிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.விஜயராகவன், ஆய்வாளர் பி.செல்லமுத்து உள்ளிட்ட தனிப்படையினருக்கும் கலாதேவி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.