ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!

அமெரிக்காவில் போலீஸ் பிடியிலிருந்த ஜார்ஜ் இறப்பின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மின்னெபொலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற 42 வயது கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் போலீஸ் பிடியில் இருக்கும்போது உயிரிழந்தார்.

ஜார்ஜை கீழே தள்ளி அவரின் கழுத்தில் ஒரு போலீஸ்காரர் தன் கால்முட்டியை வைத்துப் பலமாக அழுத்தியுள்ளார்,

இதனால் அதே இடத்திலேயே ஜார்ஜ் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பட்டப்பகலில் மக்கள் கண்முன்பே நடந்த இந்தச் சம்பவம், சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜார்ஜின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல நகரங்களிலும் பிற நாடுகளிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் அமைதியாகத் தொடங்கிய போராட்டம் பிறகு கலவரமாக வெடித்தது.

இதில் பலர் காயமடைந்துள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகளையும், ரப்பர் குண்டு துப்பாக்கிகளையும் பயன்படுத்தி போலீஸார் போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.

அமெரிக்காவின் பல நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தடையை மீறி ஆறாவது நாளாக அங்கு போராட்டம் வலுத்து வருகிறது.

இதற்கிடையில், போராட்டம் தொடர்பாகவும் போராட்டக்காரர்கள் தொடர்பாகவும் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து பல தரப்பிலும் கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இதனால் அங்கு நாளுக்குநாள் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இந்த நிலையில் போலீஸ் பிடியில் இறந்த ஜார்ஜ், கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`காவலர் பிடியிலிருந்த ஜார்ஜின் கழுத்தில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாக இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து மூச்சுத்திணறல் உருவாகி உயிரிழந்துள்ளார்’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னெபொலிஸில் உள்ள ஹென்னெபின் கவுண்டி மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜார்ஜ் மரணம் நிகழ்ந்த முறையை `கொலை’ என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாகப் பேசியுள்ள ஜார்ஜ் குடும்பத்தின் வழக்கறிஞர் பெஞ்சமின், `காவல் அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் அதிக அழுத்தம் கொடுத்ததால் ஆக்ஸிஜன் தடைப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என்பது மருத்துவ அறிக்கையில் உறுதியாகியுள்ளது.

போலீஸார் மட்டும் அன்று அப்படி நடந்துகொள்ளாமல் இருந்தால் இன்று ஜார்ஜ் உயிருடன் இருந்திருப்பார். இவை அனைத்துக்கும் போலீஸார்தான் காரணம் என்பது நிரூபணமாகிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே