திருமண அன்பளிப்பாக சின்ன வெங்காயம், பெட்ரோல், கேஸ் கொடுத்த நண்பர்கள்..!!

திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் தம்பதிகள் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் பலரும் புதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயத்தையும், பெட்ரோல், கேஸ் சிலிண்டரையும் பரிசாக அளித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் இந்த புதுமையான பரிசினை அளித்துள்ளனர் நண்பர்கள்.

பெட்ரோல் ஒரு லிட்டர் 100 ரூபாயை தொடப்போகிறது. அத்தியாவசியப்பொருளாகி விட்டது பெட்ரோல். சமையலுக்கு பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 180 ருபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

விண்ணை முட்டும் விலை உயர்வால் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணைக் கசக்குகிறார்கள் இல்லத்தரசிகள்.

சமையல் கேஸ் விலை ஒரே மாதத்தில் 75 ரூபாய் உயர்ந்து விட்டது. குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுவதால் நிறையவே சிக்கனமாக இருக்க வேண்டும். சின்ன வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பலரும் யோசித்து வருகின்றனர்.

பழைய காலம் போல சுள்ளி எடுத்து வந்து சமையல் செய்யலாம் என்றால் அடுப்பு வேண்டுமே அதற்கு எங்கே போவது என்றும் யோசிக்கின்றனர் இல்லத்தரசிகள்.

சம்பளம் அப்படியேதான் இருக்கிறது உயரவே இல்லை ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது என்பது சாமான்ய மக்களின் குற்றச்சாட்டாகும்.

இந்த நிலையில்தான் சென்னை மதுரவாயலை சேர்ந்த கார்த்திக் சரண்யா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வானகரம் பாக்யலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல்,சின்ன வெங்காய மாலை, கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை மணக்களுக்கு பரிசாக அளித்தனர்.

சின்ன வெங்காய மாலையை மாற்றிக்கொண்டனர் தம்பதியினர்.

இது திருமணத்தில் பங்கேற்றவர்களிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே