உயர்கல்வி சான்றிதழுடன் வந்தால் மட்டுமே இலவச லேப்டாப்

பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உரிய உறுதி சான்றிதழை பெற்றுக் கொண்டு நாளைக்குள் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரைகள் அனுப்பப்பட்டு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சுகன்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி 2017-18, 2018-19 ஆகிய கல்வி ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரியில், நிறுவனங்களில் இருந்து உரிய சான்றிதழ் கொண்டு வருவோருக்கு மட்டும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்.

இதனை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், உயர் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கபடாதவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே