வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இ – மெயில் முகவரி உருவாக்கி மோசடி..!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியான இ-மெயில் முகவரியை உருவாக்கி அதன் மூலம் முக்கிய அரசுத் துறை அதிகாரிகளிடம் மோசடியில் ஈடுபட முயற்சி செய்த மர்ம நபர் குறித்துக் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரில் போலி இ-மெயில் முகவரியை உருவாக்கி அதன் மூலம் அரசு அதிகாரிகளிடம் மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட முயன்றது.

இந்நிலையில், இதேபோல், வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரிலும் போலியான இ-மெயில் முகவரியை உருவாக்கிய மர்ம கும்பல், முக்கிய அரசுத் துறை அதிகாரிகளிடம் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட முக்கியத் துறை ஒன்றின் அலுவலகத்துக்கு கடந்த 12-ம் தேதி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பெயரில் வரப்பெற்ற இ-மெயிலில், “எனக்கு உங்களின் உதவி தேவை. விரைவாக பதில் மெயில் அனுப்பவும்” என்று இருந்தது.

இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரி, இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அது போலியான இ-மெயில் முகவரி என்றும் பதில் தகவல் அனுப்ப வேண்டாம் என்றும் ஆட்சியர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, வேறு சிலருக்கும் மின்னஞ்சல் வரப்பெற்ற தகவலால், மோசடியில் ஈடுபட முயன்ற நபர் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வேலூர் மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் இன்று (அக். 16) கூறும்போது, “போலி இ-மெயில் முகவரி மூலம் மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம நபர் விரைவில் கைது செய்யப்படுவார்.

அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே