5 மாதங்களுக்குப் பின் சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு

சுமார் 5 மாதங்களுக்கு பிறகு சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், நோய்த்தொற்று பாதிப்பு அதிகளவில் காணப்பட்டதால் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இன்று முதல் பல்வேறு முன்னெச்சரிக்கைகளுடன் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுக்கடையின் கிரில் பகுதிக்கு வெளியே கவுன்ட்டர் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாமியானா பந்தல் மற்றும் மைக் செட் ஏற்பாடு செய்து கொரோனா முன்னெச்சரிக்கைகளை வலியுறுத்தவும், தன்னார்வலர்கள் அல்லது மதுக்கூட ஊழியர்கள் 5 பேரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடையில் போதிய இடம் இருப்பின் 2 கவுன்ட்டர்களை அமைத்துக்கொள்ளவும், தனிமனித இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்த பின்னரே கவுன்டரில் அனுமதிக்க வேண்டும் எனவும், ஊழியர்கள் தற்போது வழங்கியுள்ள காட்டன் கையுறை, மாஸ்க் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை அணிந்து பணிபுரிய வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே