சென்னை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள் ; சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் என்னும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கோ செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்த போதிலும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.

மண்டலம் விட்டு மண்டலம் என்ற நிலை மாறி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற கடுமையான விதி பின்பற்றப்பட்டது. திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் அளிக்கப்பட்டு வந்தது. மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தாலும் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இ-பாஸ் பெறுவதற்கு இடைத்தரகர்கள் லஞ்சம் வாங்கிய சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில், 17-ந் தேதி (நேற்று) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி இ-பாஸ் நடைமுறை தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டது.

உடல் நலம் சரியில்லாத உறவினர்களை பார்க்க செல்லுதல், தவிர்க்க முடியாத சிகிச்சைகள், சொந்த ஊரில் தவிக்கும் பெற்றோர், பிள்ளைகளை பார்க்க செல்லுதல், நகைகளை மீட்க செல்லுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்தனர். இ-பாஸ் எளிதாக கிடைத்ததாலும், போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கெடுபிடி இல்லாததாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

வாகனங்கள் அதிகமாக வந்ததால் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று காலை முதலே வாகன நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் மற்ற சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தவர்கள், 4 மாதங்களுக்கு பிறகு தங்கள் சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்றனர். இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் ரோடு, தாம்பரம் புறவழிச் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ஏராளமானோர் வேலைக்கு சென்றதை பார்க்க முடிந்தது.

இ-பாஸ் நடைமுறை தளர்த்தப்பட்டு இருப்பதால் அரசின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. மாவட்ட எல்லைகளில் முன்புபோல பெருமளவில் சோதனைகள் நடைபெறாத நிலையில், வெளியூருக்கு செல்லும் மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே ஆஸ்பத்திரிகளில் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது.

தமிழகத்துக்குள் பயணிக்க இ-பாஸ் நடைமுறையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே