மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் சவுராஷ்டிரா மொழியில் பேசி முன்னாள் எம்.பி. வாக்கு சேகரிப்பு

மதுரையில் அதிமுக-பாஜக கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு மதுரை வந்த பிரதமர் மோடி, பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

அங்கிருந்து நேற்று காலை 11.45-க்கு கூட்டம் நடைபெற்ற அம்மா திடலுக்கு வந் தார். பிற்பகல் 12.10 மணி முதல் 12.40 மணி வரை பேசினார். பிரதமர் பேசத் தொடங்கியதும் ‘வெற்றி வேல், வீரவேல், வெற்றி, வெற்றி, வெற்றிவேல், வீர, வீர, வீர வேல்’, வணக்கம், நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி எனத் தமிழில் பேசினார். அவரது பேச்சை தமிழக பாஜக பொதுச் செயலர் ஆர்.சீனிவாசன் மொழி பெயர்த்தார்.

பிரதமரை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். மேடைக்கு வந்ததும் பிரதமர் மோடி பாஜகவினரை பார்த்து மகிழ்ச்சி யுடன் கையசைத்தார்.

பிரதமர் வரும் வரை மேடை பாஜக வினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கூட்டணி கட்சித் தலைவர்களான தேவநாதன் யாதவ், திருமாறன், ஜான்பாண்டியன், முன்னாள் எம்பி ஏஜிஎஸ். ராம்பாபு, எச்.ராஜா, மதுரை வடக்கு பாஜக வேட்பாளர் சரவணன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.

பிரதமர் வந்ததும் மேடை அதிமுகவினர் கைக்கு மாறியது. முதலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். ராஜன் செல்லப்பா வரவேற்றார். பின்னர் துணை முதல்வர், முதல்வர், பிரதமர் பேசினர்.

முடிவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நன்றி கூறினார்.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி, மத்திய இணை அமைச்சர் விகே.சிங், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தேனி எம்பி ரவீந்திரநாத் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் பங்கேற் றனர். வேட்பாளர்களுக்கு மாநாட்டு பந்தலில் தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் வேட்பாளர்கள் பிரதமருடன் ஒரே மேடையில் இருந்தனர்.

பிரதமர் மோடிக்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், புற நகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் மீனாட்சியம்மன் கோயில் புகைப்படத்தை வழங்கினர்.

பொதுக் கூட்டத்தையொட்டி சுற்றுச் சாலையில் பாண்டி கோயில் சந்திப்பு முதல் விரகனூர் ரவுண்டானா வரை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போக்கு வரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்தச் சாலையில் கட்சியினர் மட்டுமே அனுமதிக் கப்பட்டனர். வாகனங்கள் நகருக்குள் விடப்பட்டதால் விரகனூர், தெப்பக்குளம், அண்ணாநகர் பகுதிகளில் சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுக்கூட்ட திடலுக்குள் கட்சியினர் 9 மணிக்கு முன்பே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேடைக்கு பிரதமர் வந்த பிறகு பொதுக்கூட்ட திடலுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் விஐபி பாஸ்களுடன் வந்தவர்கள் போலீ ஸாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி முதியவர் ஒருவர் விஐபி பகுதி வழியாக பந்தலுக்குள் செல்ல முயன் றார். அவரை போலீஸார் அனுமதிக்காததால் அவருக்கு பாஜக மாநில நிர்வாகி ஒருவர் விஐபி பாஸ் கொடுத்தார். இருப்பினும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை.

பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் போலீஸாரின் கெடுபிடி அதிகமாக இருந் தது. பேனா, தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லக்கூட அனுமதிக்கவில்லை. இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் கட்சியினர், செய்தியாளர்கள் தவித்தனர்.

தமாகாவைச் சேர்ந்த முன்னாள் எம்பி ஏஜிஎஸ். ராம்பாபு சவுராஷ்டிரா மொழியில் பேசி வாக்குச் சேகரித்தார்.

கூட்டம் முடிந்ததும் மதியம் ஒரு மணி யளவில் பிரதமர் ராணுவ ஹெலிகாப்டரில் கேரள மாநிலம், பத்தனம் திட்டா சென்றார். மேலும் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் உடன் சென்றன. ஆயுதப்படை கூடுதல் டிஜிபி சங்கர் ஜூவால் தலைமையில் 7000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே