பணம் என்றால் ஓ.எஸ்.மணியன்: பணம் இல்லை என்றால் ‘நோ’ எஸ்.மணியன்; ஸ்டாலின் விமர்சனம்

இலங்கை கடலில் மீன்பிடிக்கலாம் என்று பொய்யான வாக்குறுதியை அளித்து, மீனவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குச் சேகரித்துள்ளார் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம், கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி, நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து ஆகியோரை ஆதரித்து, வேதாரண்யம் கடைவீதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 03) வாக்குச் சேகரித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது

“இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். பணம் என்றால் ஓ.எஸ்.மணியன். பணம் இல்லை என்றால் ‘நோ’ எஸ்.மணியன்.

அவரைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டும் என்றால், சுவர் ஏறி குதித்து ஓடிய மந்திரி என்றால் அவரை எல்லோருக்கும் தெரியும். கஜா புயலின்போது பொதுமக்கள் அவரை ஓட ஓட விரட்டி இருக்கிறார்கள். அமைச்சர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 150 பேர் மீது கொலை முயற்சி, திருட்டு, குண்டர் சட்டம் எனப் பல்வேறு வழக்குகளைப் போட வைத்திருக்கிறார். இதனால் அவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்படும். வழக்குப் போட்ட அவர்தான் ஜெயிலுக்குப் போகப் போகிறார்.

இந்திய எல்லையில், சர்வதேச எல்லையில் மீன் பிடித்தால் கூட சுடுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க இலங்கை கடலில் மீன் பிடிக்கலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவர்களிடம் பொய்யான வாக்குறுதியை அளித்து வாக்குச் சேகரித்திருக்கிறார். வருகிற 6-ம் தேதி அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே