முன்னாள் எம்.பி., ஏ.எம்.வேலு உடல்நலக்குறைவால் காலமானார்…!!

அரக்கோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.வேலு இன்று காலை காலமானார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், கொரோனாவில் இருந்து பூரண குணம் பெற்ற நிலையிலும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக அதே மருத்துவமனையில் காலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.எம்.வேலுவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அதற்காக சிகிச்சைகளை பெற்று பூரண குணமடைந்த நிலையில் நுரையீரல் தொற்றின் காரணமாக அதே மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 5.30 மணி அளவில் மருத்துவமனையிலேயே காலமானார். ஏ.எம்.வேலுவின் உடல் சென்னை, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு மதியம் வைக்கப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சிலமணி நேரங்களுக்கு பின் சோளிங்கர் மயானத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் கடந்த 1980 ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட ஏ.எம்.வேலு தொடர்ந்து 1996ல் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

முதல் முறை நாடாளுமன்றத்தின் முழு காலமான 6 ஆண்டுகள் எம்பியாக இருந்த இவர், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட போது இரண்டு வருடங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் பதவி இழந்தார். பேருந்து அதிபரான இவர், திமுக தலைவர் மு.கருணாநிதி, தமாகா நிறுவனர் கருப்பையா மூப்பனார் ஆகியோரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ஆவார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே