இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மருத்துவமனையில் அனுமதி..!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நலமாக இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு நேற்று லேசான நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இன்று ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் நலமாக இருக்கிறார் என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டுக்கு சென்றுவிடுவார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மருத்துவமனை அறிக்கையில் “கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டுக்கு (Fortis Escorts Heart Institute, Okhla Road) அக்டோபர் 23 ஆம் தேதி அதிகாலை 1:00 மணிக்கு நெஞ்சு வலி காரணமாக வந்தார். 

அவருக்கு உடனடியாக நள்ளிரவில் அவசர கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.

தற்போது, அவர் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் அதுல் மாத்தூர் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் உள்ளார். கபில் தேவ் இப்போது நலமாக இருக்கிறார்.

அவர் ஓரிரு நாட்களில் வீட்டுக்கு செல்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஐசிஏ) தலைவர் அசோக் மல்ஹோத்ரா முன்னதாக, “கபில் தேவ் இப்போது நன்றாக இருக்கிறார்.

நான் அவருடைய மனைவியிடம் (ரோமி) பேசினேன்” என்று முன்னாள் டெஸ்ட் வீரரும் மல்ஹோத்ரா கூறினார்.

கபில் தேவ் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிசிசிஐ தன்னுடைய டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே