சென்னை: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு பல வெற்றிகளை குவித்த கேப்டன்களில் ஒருவர் எம்எஸ் தோனி. உலக கோப்பை தொடரில் கிடைத்த தோல்விக்கு பிறகு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந் நிலையில் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக 2004ம் ஆண்டு முதன்முறையாக ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தார்.
பின்னர் 2005ம் ஆண்டில் முதன்முறையாக இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடினார். 2007ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக செயல்பட்டார். 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளாக டெஸ்ட் தொடர் கேப்டனாகவும் இருந்தார்.
இறுதியாக நியூசிலாந்துக்கு எதிராக 2019ம் ஆண்டு ஒரு நாள் போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியிலும் அவர் விளையாடியுள்ளார்.
350 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 10 ஆயிரத்து 773 ரன்கள் குவித்துள்ள அவரின் பேட்டிங் சராசரி 50.6 ஆகும். 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 ஆயிரத்து 876 ரன்கள் எடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ஐ.பி.எல். போட்டிகளிலும் அவர் விளையாடி வருகிறார். அதற்காக ரெய்னா, பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ் உள்ளிட்டோருடன் சென்னை வந்து இருக்கிறார்.
அவர் இன்று நடந்த பயிற்சியிலும் பங்கேற்றார். அதன் பின்னரே தோனி தமது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். இதையறிந்த அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.