அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை தொடர்ந்து, அகவிலைப்படி உயர்வையும் நிறுத்திவைப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி உயர்வை அடுத்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வரை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது.

முன்னதாக, 4 முதல் 21 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பழைய முறைப்படி 17 சதவீத அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஓராண்டு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழக அரசால் 2 ஆயிரத்து 450 கோடி ரூபாயை சேமிக்க முடியும்.

மத்திய அரசு அறிவித்ததைப் போலவே, தமிழகமும் அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அடுத்த ஆண்டு ஜூன் வரை நிறுத்திவைப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு நிறுத்தத்தால் தமிழக அரசால் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் சேமிக்க முடியும்.

பழைய முறைப்படி அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என்றும்; அதிலும், 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2021 ஜூன் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்கப்படாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே