2020-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தமிழகத்தில் மத வேறுபாடின்றி அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

தமிழில் புத்தாண்டு வாழ்த்துக் கூறி உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசிய அளவில் நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றதற்கு பாராட்டு தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக குறிப்பிட்ட ஆளுநர், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாக கூறினார். 

சமூக நீதியை காப்பதில் உறுதி கொண்டுள்ள தமிழக அரசு 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை பாதுகாக்கும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமது உரையில் குறிப்பிட்டார். 

தமிழகத்தில் தொழிற்சாலை மறுமலர்ச்சி ஏற்பட மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்த ஆளுநர், வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

2019-2020 ஆம் ஆண்டில், சுய உதவிக்குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

டெங்கு, சிக்குன்குனியா, மலேரியாவைத் தடுக்க ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா கொசுவலை வழங்கப்படும் என்றும் தெரிவித்த ஆளுநர், பெண்ணையாற்றின் குறுக்கே அணைக்கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

ஜிஎஸ்டி அமலாக்கத்தில் தமிழக நலனை காக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே