தமிழகம் மற்றும் புதுவையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள மூன்று தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாங்குநேரியில் அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், புதுவையில் காமராஜ் நகர் பகுதியிலும் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட 46 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த ஒன்றாம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது 22 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 24 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான இன்று சுயேட்சை வேட்பாளர் திருமுருகன் என்பவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
அதன் பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன்படி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில், சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றன.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன், அதிமுக, திமுக வேட்பாளர்கள் உட்பட விக்கிரவாண்டி தொகுதியில் 12 பேர் களத்தில் உள்ளதாக கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தழிழ்ச்செல்வனும், திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி போட்டியிடுகிறார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 11 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுஇருந்தது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இறுதி நாளான இன்று இரண்டு பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் ஒன்பது பேர் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மன்சூர் அறிவித்தார்.
காமராஜ் நகர் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான் குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் ப்ரவீணா தமிழ்வாணன் களம் காண்கிறார்.