உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 549 மனுக்களுக்குத் தீர்வு..!!

தேர்தல் பரப்புரையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, 9-5-2021 அன்று அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 72 மரப்பெட்டிகளிலும் மற்றும் 275 அட்டை பெட்டிகளிலும் சுமார் 4 இலட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை (TNeGA) மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி (SMS) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள்.

இதுவரை சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதை குறிக்கும் வகையில், 10 பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.

சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள் வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முதற்கட்டமாக பொது கோரிக்கைகள் தொடர்பாக வரப்பெற்ற நான்கு மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒப்புதல் ஆணை இன்று முதலமைச்சரால் சம்பந்தப்பட்ட பின்வரும் துறைகளுக்கு வழங்கப்பட்டது.

அதன் விவரம் பின்வருமாறு:

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முனுசாமி என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில், அழிஞ்சிவாக்கம் கிராம ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டிடம் ரூ.10.1 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதி ஆணையும், திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த முருகன் என்பவரின் கோரிக்கையை ஏற்று, ஆமூர் ஊராட்சி, சித்தேரி கால்வாயில் தடுப்பணை கட்டுவதற்கு ரூ.4.6 இலட்சத்தில் அனுமதி ஆணையும், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த குணசேகரன் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில், அச்நெல்லிகுப்பம் கிராமம், சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.1.89 இலட்சத்தில் அனுமதி ஆணையும், இராணிப்பேட்டை மாவட்டம், கல்மேல்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த திரு. புவனேஸ்குமார் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில், எருக்கம் தொட்டி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் குழாய் அமைத்திட ரூ.1.1 இலட்சம் அனுமதி ஆணை ஆகிய நலத் திட்டங்களுக்கான ஆணைகள் இன்று முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

இதேபோல், இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென இத்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே