சென்னையில் காற்றாடியின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை பலி

சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றுகொண்டிருந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கொண்டித்தோப்பைச் சேர்ந்த கோபால் என்பவர் தனது 3 வயது மகன் அபினேஷ்வருடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ வந்த காற்றாடி விட பயன்படுத்தும் மாஞ்சா நூல் குழந்தை அபினேஷ்வரின் கழுத்தை அறுத்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த சிறுவனை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதே பகுதியில் பள்ளி சென்ற சிறுமி, மாஞ்சா நூலால் கழுத்தறுபட்டு இறந்ததை அடுத்து, மாஞ்சா நூல் கொண்டு காற்றாடி விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டது.

அப்படி இருந்தும் இப்பகுதியில் மாஞ்சா நூல் கொண்டு காற்றாடி விடுவது அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே