தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படம் தடை செய்யப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி..!

தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படம் தடை செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. அதன் 2-ம் பாகமாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை இணையத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா, கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம் என கேள்வி எழுப்பினார்.

மேலும் தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராமல் பல கலைஞர்கள் கட்டமைத்த கூடு இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கப்படுவதாக தனது கடும் கண்டனத்தையும் பதிவு செய்தார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ”இரண்டாம் குத்து’ படத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

சென்சார் போர்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தும்.

தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் எந்தக் காட்சிகளாக இருந்தாலும், திரைப்படங்களாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும்.

தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் எந்தப் படம் வந்தாலும், யாருடைய படமாக இருந்தாலும் அதனைத் தடுக்கும் வகையில் அரசு முழு கவனத்துடன் சென்சார் போர்டு மூலமாக தடைவிதிக்க தமிழக அரசு ஆவணம் செய்யும்’ இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே