அரியர் மாணவர்கள் தேர்ச்சி..; தற்காலிகமாக நிறுத்தி வைத்தது சட்டப் பல்கலைக்கழகம்..!

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் – மே செமஸ்டரில் அரியர் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்த மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, அவர்களுக்கு Internal மற்றும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

மருத்துவ மாணவர்கள் தவிர பிற படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் ஆபிரஹாம் அறிவித்துள்ளார்.

அரியர் மாணவர்களுக்கு Internal மற்றும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கும் விவகாரத்துக்கு அகில இந்திய பார் கவுன்சிலின் பொதுக்குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே முடிவு எடுக்கப்பட உள்ளதால், பார் கவுன்சிலின் அறிவுறுத்தலின் பேரில் தேர்ச்சி வழங்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே