உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மீண்டும் தலையிட விரும்பவில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், உத்தரவில் உள்ள IRRESPECTIVE என்ற வார்த்தை தொடர்பாக விளக்கம் கோரி திமுக உச்சநீதிமன்றத்தை நாடியது. 

இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என்றும்; உத்தரவில் தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தது.

மேலும் இந்த உத்தரவால் தேர்தல் நடத்த தடையில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். 

இந்த விவகாரத்தில் திமுக அரசியல் விளையாட்டு விளையாடுவதாக தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிட்டதாகவும், அதை அப்போது நம்பவில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், ஆனால் தற்போது அந்த வாதத்தை நம்ப வேண்டிய சூழல் உருவாகிவிடுமோ என எண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே