பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு – 3 பேராசிரியர்கள் நேரில் ஆஜராகுமாறு சம்மன்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பேராசிரியர்கள் 3 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபின் தற்கொலை வழக்கை, மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

தற்கொலைக்கு முன்பான மாணவியின் செல்போன் பதிவில், துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் காரா, மிலிந்த் பிராமே ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள குற்றப்பிரிவு போலீசார் ஐஐடிக்கே நேரில் சென்று 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியின் தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 3 பேராசிரியர்களிடமும் தனித்தனியே விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொடர்ந்து மாணவியின் தோழிகள், விடுதி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதனை அடுத்து மாணவியின் தந்தையிடமும் நேரடியாக விசாரணை நடத்தி, பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டது.

அதில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் குறித்து பாத்திமா பலமுறை வீட்டில், அச்சத்தை வெளிப்படுத்தியதாக அவருடைய தந்தை தெரிவித்திருந்தார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் மேலும் 2 பேராசிரியர்களையும் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், தற்போது 3 பேருக்கும் ஐஐடி பதிவாளர் மூலம் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மூவரும் இன்று, நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே பாத்திமா தற்கொலை தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஐஐடி வளாகத்தினுள் முதுகலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே