சென்னையில் மீனவர்கள் எச்சரிக்கையை மீறி கடலில் கடல் சறுக்கில் ஈடுபட்ட ஐ.டி ஊழியர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை திருவான்மியூர் எல்லை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.

திருவான்மியூர் அருகேயுள்ள கடலில் இன்று காலை தன் மகளுடன் பாலாஜி கடல் சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, மீனவர்கள் ‘ கடலில் அலை வேகமாகவும் அதிகமாகவும் உள்ளது. நீங்கள் இந்த சமயத்தில் கடல் சறுக்கு செல்லாதீர்கள் ‘ என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால், அதையும் மீறி பாலாஜி தன் மகளுடன் கடல் சறுக்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த சமயத்தில் கடலில் எழுந்த ராட்சத அலையில் பாலாஜியும் அவர் மகளும் சிக்கினர். இதில், பாலாஜி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். பாலாஜியையும் அவரின் மகளையும் மீட்க மீனவர்கள் முயன்றனர்.

இந்த முயற்சியில் மகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

பாலாஜி கடலில் மூழ்கி பலியாகி விட்டார்.

திருவான்மியூர் போலீஸார் பாலாஜியின் மகளிடத்தில் விசாரணை நடத்தி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தந்தையை பறிகொடுத்து விட்டு கடற்கரையில் அமர்ந்திருந்த சிறுமியை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. பாலாஜியின் உடல் மீட்கப்பட்டது.

பொதுவாகவே , திருவான்மியூர் கடல் பகுதியில் எச்சரிக்கையை மீறி மக்கள் குளிப்பதால் தொடர்ந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே