மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் குளிரில் 73 நாட்களாக போராடி வரும் விவசாயிகள், இன்று நாடு முழுவதும் சக்கா ஜாம் எனப்படும் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த போராட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மறியல் போராட்டம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சக்கா ஜாம் என்பது சக்கரங்களை நிறுத்துதல் என்று பொருள்.

இன்றைய தினம் 3 மணிநேரம் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி ஸ்தம்பிக்க வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடும் குளிர், மழை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருவதால் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.

விவசாயிகள் கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.

வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

செங்கோட்டையில் விவசாயிகள் கொடியை பறக்க விட்டனர்.

இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது விவசாயிகளை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் சாலைகளில் ஆணிகளை புதைத்தும், முள்வேலிகளை அமைத்தும் பல அடுக்கு அரண்களை அமைத்துள்ளனர்.

தடுப்புகளை அகற்றும் வரையில் இனி பேச்சுவார்த்தைக்கு வரப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் சக்கா ஜாம் எனப்படும் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சக்கா ஜாம் போராட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சாலை மறியல் நடைபெறாது. ஆனால், தேசிய தலைநகர் பகுதியின் இதர இடங்களில் மறியல் நடக்கும்.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மறிக்கப்படும்.

அதே நேரத்தில் ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் போன்ற எமர்ஜென்சி மற்றும் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த வாகனங்கள் தடுக்கப்படாது.

சாலை மறியலால் சிக்கிக்கொண்டவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படும் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலையில் சிக்கிய மக்களுக்கு கொண்டைக் கடலை மற்றும் பச்சைப் பட்டாணி வழங்கப்பட்டு, அரசு செய்யும் செயல்கள் குறித்து விளக்கப்படும்.

மதியம் மூன்று மணிக்கு போராட்டம் முடிவடைந்த உடன் வாகனங்கள் தொடர்ந்து ஒரு நிமிடத்துக்கு ஹாரன் ஒலி எழுப்பினால் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக கருதப்படும்.

விவசாயிகளின் சக்கா ஜாம் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விவசாய பிரிவான பாரதிய கிசான் சங் தெரிவித்துள்ளது.

சக்காஜாம் போராட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே