டெல்லி முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்ற மீதமுள்ளவர்களை கண்டறிய 50 தனிப்படைகள் அமைப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

தற்போது வரை வெளிநாடு சென்று வந்த, நோய் அறிகுறி தென்பட்ட 2,354 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 1977 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

நேற்றுமுன்தினம் வரை 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

303 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 50 பேர் டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மர்காஸில் (மையத்தில்), இந்த மாதம் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள். 

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேருக்கு நேற்று காலையில் நோய் கண்டறியப்பட்டது.

அதில் 5 பேர் டெல்லி முஸ்லீம் மாநாட்டிற்கு சென்றவர்கள். மாலையில் 50 பேருக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.

இதில் 22 பேர் நெல்லை, 18 பேர் நாமக்கல், 4 பேர் கன்னியாகுமரி, ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர்.

இவர்களில் 515 பேரை மட்டுமே கண்டுபிடித்துள்ளோம். மற்றவர்கள் தேடி வருகிறோம்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

இதன் மூலம் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவுவது தடுக்கப்படும். டெல்லி முஸ்லீம் மாநாட்டில் சென்றவர்களில் டெல்லியிலேயே 400 பேர் தங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் பங்கேற்றவர்கள் உடனடியாக 7824849263, 044 46274411 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அவர்களது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மர்காஸில் நடைபெற்ற முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்று தலைமறைவான நபர்களை கண்டறிய 50 தனிப்படைகளை தமிழக அரசு அமைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே