காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். மாற்றுத்திறனாளியான இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், விவசாயம் செய்வதற்காக நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடனை செலுத்துவதாக ஒப்பந்தம் போட்டு டிராக்டர் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு அவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தவணை கட்டுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 மாதங்களாக கடன் தவணை செலுத்தாமல் இருந்துள்ளார். இதையடுத்து, நிதி நிறுவன ஊழியர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மனோகரன் நிதி நிறுவன வாசலில் வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் மனோகரனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்திருந்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லும்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் மனோகரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவனம் வைத்துள்ள அமர்நாத், கிருஷ்ணா, சரத்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம மக்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதே தற்கொலைக்கு காரணம் என்று உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.