பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்..!!

பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்தக்கண்ணன் புற்றுநோயால் இறந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 48.

சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் சன் மியூசிக், SS மியூசிக் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பார்வையாளர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். தொலைக்காட்சி மட்டுமல்லாமல், ‘சிந்துபாத்’ சீரியல், ‘சரோஜா’, ‘அதிசய உலகம்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

Bile Duct Cancer என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (ஆகஸ்ட் 16) இரவு காலமாகியிருக்கிறார். இந்த செய்தியை இயக்குநரும், அவரது நண்பருமான வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

சிங்கப்பூரில் வசித்து வந்தவர் தனது மனைவி ராணியின் படிப்பிற்காக சென்னை வந்திருக்கிறார். அதன் பின்பே நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து இருக்கிறார். இவர்ககளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனை ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ஆனந்த கண்ணன்.

பின்பு, தொலைக்காட்சியில் இருந்து விலகி ஆர்ஜே, பகுதி நேர விஜேவாகவும் பணிபுரிந்தார். சிங்கப்பூரில் இருந்த போதே அங்கிருந்த பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். சன் டிவியில் பணிபுரிந்த காலத்தில் விஜய், சூர்யா, அசின் என பல முன்னணி நட்சத்திரங்களை பேட்டி எடுத்துள்ளார். இவரது கலகலப்பான பேச்சுக்கும், சிரித்த முகத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

பின்பு 2011ம் வருடத்திற்கு பிறகு மீண்டும் சிங்கப்பூரில் குடியேறிய அவர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு டிஸ்கவரி தமிழில் ஒளிபரப்பான ‘சுவை’ எனும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரண செய்தி அறிந்து ரசிகர்கள் பலரும் அவரது சிரித்த முகத்தையும், அவரது ஆரம்ப கால தொலைக்காட்சி பயணத்தில் தங்களது நினைவுகளையும் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே