ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், நிர்வாணப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், 1,59,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உள்ளது. 6,314 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டதும், பெரும்பாலானவர்களுக்கு பரிசோதனையை விரிவுப்படுத்தியதாலும், பிற ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் உயிரிழப்புகளை ஜெர்மன் அதிகளவில் கட்டுப்படுத்தியதாக பாராட்டுக்களை பெற்றது.
இருப்பினும் ஜெர்மனில் பிரச்னை இல்லாமல் இல்லை என்பதை மருத்துவர்களின் நிர்வாணப் போராட்டம் காட்டியுள்ளது.
சுவாச சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் மணிக்கணக்காக ஓய்வின்றி வேலை பார்க்கின்றனர்.
அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தீரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசிடம் கோரிக்கை வைத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்கப்படாததால், நிர்வாண போராட்டத்தில் இறங்கி கவனம் ஈர்த்துள்ளனர்.
அலெய்ன் கொலம்பி எனும் பிரான்ஸ் மருத்துவர், பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்த இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை பின்பற்றி ஜெர்மன் மருத்துவர்கள், ‘பிளாங்கே பெடென்கென்’ எனும் இயக்கத்தை தொடங்கியதாக அவர்களது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களுக்கான டுவிட்டர் பக்கம் ஒன்றை தொடங்கி, வெற்று உடம்புடன் வெறும் ஸ்டெதாஸ்கோப் அணிந்தபடியும், டாய்லெட் பேப்பர்கள் சுற்றியபடியும், கட்டுக்கட்டும் துணிகளை சுற்றியபடியும் படங்களை பதிவேற்றியுள்ளனர்.
சிலர் முற்றிலும் நிர்வாண படங்களை பதிவேற்றி பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர்.
அதில், “நாங்கள் உங்கள் மருத்துவர்கள். உங்களுக்கு பாதுகாப்பான சிகிச்சையளிக்க எங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. எங்களிடம் இருக்கும் உபகரணங்களும் தீர்ந்துவிட்டால், இப்படி தான் நாங்கள் இருக்க வேண்டியிருக்கும்.” என குறிப்பிட்டுள்ளனர்.