கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும், அதிகமானோர் குணம் – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெல் பயிரிடும் பரப்பும், நெல்விளைச்சலும் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் அரசின் 16 துறைகளின் சார்பில் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பல்வேறு துறைகளின் சார்பில் 52 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்ட கட்டங்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் திறந்து வைத்தார்.

இதேபோல் பொதுப்பணித் துறை, தோட்டக்கலைத் துறை, பால்வளத் துறை ஆகியவற்றின் சார்பில் 19 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கந்தசாமி, காவல் துறை, நலவாழ்வுத் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 16 துறை அதிகாரிகளுடன் குடிமராமத்துப் பணி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், அரசு மருத்துவர்களின் அயராத முயற்சியால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

சிற்றூர்களில் உள்ள மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் மினி கிளினிக் என்கிற திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் தனித்தனியாகக் கலந்துரையாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் அரசிடம் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன என்பதைக் கேட்டறிந்தார்.

மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே