இங்கிலாந்து – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட்: பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள்

ஏஜியஸ் பவுலில் நடைபெற்று வரும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது நாள் ஆட்டமும் மழையினால் பாதிக்கப்பட்டு 40.2 ஓவர்களே சாத்தியமானது.

ஆட்டம் வெளிச்சமின்மை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட போது பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.

விக்கெட் கீப்பர் ரிஸ்வான் போராட்ட 60 ரன்களுடனும் நசீம் ஷா 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.

ஒரு டெஸ்ட்டில் தோல்வியடைந்த பாகிஸ்தான் நேற்று 126/5 என்ற நிலையில் இறங்கியது. ஆட்டமும் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்துதான் தொடங்கியது.

25 நாட் அவுட்டுடன் தொடங்கிய பாபர் ஆஸம், உணவு இடைவேளை வரை எடுத்த 29 ரன்களில் 20 ரன்களை பாபர் ஆஸம் எடுத்தார். 

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளில் சற்றே தடுமாறினார், ஆனால் இங்கிலாந்தும் சீரான முறையில் வீசவில்லை.

ஆனாலும் இதனைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிய பாபர் ஆஸம் 47 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடின் அற்புதமான பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார்,

பந்து பிரமாதமாக உள்ளே வந்து பிறகு சற்றே வெளியே எடுக்கப்பட்டது, ஆஸம் 47 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8வது முறையாக அரைசதம் எடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 14 ரன்களில் பிராடின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு அவுட் ஆகியிருப்பார், அவரது தவறான புல்ஷாட் சரிவர சிக்காமல் பட்லரின் தவற விட்ட கேட்ச் ஆனது.

யாசிர் ஷா 5 ரன்களில் ஆண்டர்சனிடமும், ஷாஹின் அஃப்ரீடி டக்கில் ரன் அவுட் ஆனார். சிப்ளியின் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆக பாகிஸ்தான் 176/8 என்று இருந்தது, 200க்குள் சுருட்டியிருக்க வேண்டும்.

ஆனால் களவியூகத்தை நெருக்கமாக அமைக்காமல் ரிஸ்வானுக்கு ரூட் வசதி செய்து கொடுத்தார். பவுலர்களின் லைனும் துல்லியமாக இல்லை. ரிஸ்வான் அபாரமாக ஆடி 104 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

9-வது விக்கெட்டுக்காக அப்பாஸுடன் (2) 39 ரன்களைச் சேர்த்தார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிராட், அப்பாஸை எல்.பி.செய்தார்.

ரிஸ்வான் ஒரு பவுண்டரியை அடித்து தன் ஆக்ரோஷ நோக்கத்தை வெளிப்படுத்த வெளிச்சமில்லாமல் போனது. 223-9 என்று பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்டத்தை முடித்தது. 116 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் ரிஸ்வான் 60 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே