இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரில் கடந்த 5-ந் தேதி சென்னையில் தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பிப்ரவரி (13) தொடங்கியது.

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதன்படி ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர்.

இதில் சுப்மான்கில் ரன் கணக்கை தொடங்காமலே விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பிறகு களமிறங்கிய புஜாரா 21 ரன்களிலும், கேப்டன் கோலி 0 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் 86 ரன்களுகளுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் – ரஹானே ஜோடி அணியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டது.

இதில் இந்தியாவில் சரிவர விளையாடவில்லை என கடும் விமர்சனங்களை சந்தித்த துணைக்கேப்டன் ரஹானே, தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் மறுபுறம் தனது ஏதுவான பந்துகளை சிக்சருக்கும் பவுண்ரிக்கும் விரட்டிய ரோகித் சர்மா தனது 7-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 162 ரன்கள் சேர்த்த நிலையில், 161 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

அவரது ரன்களில் 18 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். தொடர்ந்து அரைசதம் கடந்த துணைக்கேப்டன் ரஹானே 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அஸ்வின் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.

பண்ட் 33 ரன்களிலும், அக்சர் பட்டேல் 4 ரன்களிலும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து இன்று தொடங்கி 2-வது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளும், ஜாக் லீச் 2 விக்கெட்டுகளும், கேப்டன் ரூட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதே நிலைய கடைசி வரை தொடர்ந்தால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்களில் சுருண்டது. சிம்பிளி 16 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 18 ரன்களிலும், கடந்த போட்டியில் இரட்டை சதமடித்த கேப்டன் ஜோ ரூட் 6 ரன்களிலும், ஒல்லி போப் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசிவரை களத்தில் இருந்த பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 195 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே