7 உட்பிரிவுகளை சேர்ந்தோர் இனி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவர் – பிரதமர் மோடி அறிவிப்பு..!!

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து இனி தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்தார்.

காலையில் விமானம் மூலம் வந்த அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் வந்தடைந்தார்.

பிரதமர் வரும் வழி எங்கும் அதிமுக, பாஜக தொண்டர்கள் அவருக்குக் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரையாற்றினார்.

அடுத்து முதல்வர் பழனிசாமி பேசினார். பிரதமரை நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

அவர் பேசுகையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து இனி தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

தங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தேவேந்திரகுல வேளாளர் சகோதர சகோதரிகள், கோரிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்கிறது. அவர்கள் இனி, பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுவார்கள்.

6 முதல் 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கப்படுவார்கள்.

தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளித்த தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கோரிக்கையை தமிழக அரசு ஆதரித்து வந்துள்ளது.

அந்த மக்களுடனான எனது சந்திப்பு மறக்க முடியாதது.

அப்போது அவர்களின் வருத்தங்களை தெரிவித்தார்கள். பல ஆண்டுகளாக அது நிறைவேறவில்லை எனக்கூறினர். அவர்களின் பெயரான தேவேந்திர என்பதுடன், எனது பெயரான நரேந்திர என்பதோடு ஒத்துப்போகிறது என்பதை குறிப்பிட்டேன்.

அவர்களில் ஒருவனாக, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவனாக இருக்கிறேன் என்பதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். இந்த தீர்மானம் வெறும் பெயர் மட்டும் அல்ல. அவர்களின் கண்ணியம் பற்றியது. சுய கவுரவத்தை காக்கும்.

அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெயர் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நடப்புக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே