அரசியல்கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், வாக்குச்சாவடிக்கு அருகில் அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களின் முகவர்களோ தேவையின்றி கூடி நிற்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளது.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் தவிர வேறு யாரும் வாக்குச்சாவடிக்குள் நுழையக்கூடாது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர்கள் இலவசமாகப் பயணம் செய்ய வாடகைக்கோ அல்லது சொந்த வாகனத்தையோ பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது.

மீறி வாக்காளர்களை அழைத்துச் சென்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளராக மட்டுமின்றி எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே