விழுப்புரத்தில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கு : இருவரை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்கள் இருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்,

“கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கே. கலியபெருமாள் (சிறுமதுரை புதுக்காலனி கிளைக் கழகச் செயலாளர்), கே. முருகன் (சிறுமதுரை காலனி கிளைக் கழகச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் சிறு மதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ(14) (10ஆம் வகுப்பு சிறுமி).

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த இவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா் காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோந்த இருவா் தன்னை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தாா்.

இதையடுத்து அதிமுக பிரமுகர் முருகன், கலியபெருமாள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று காலை மரணமடைந்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே