டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்குறுதி அளித்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று பிரசாரம் ஓய்வதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பரப்புரையின் போது பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில பிரச்சனைகள் குறித்து பொது விவாதம் நடத்த தயாரா என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுத்டுள்ளார்.

டெல்லி மக்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த விவாதத்திற்கான நேரம் மற்றும் இடத்தை அமித்ஷாவே முடிவு செய்யலாம் எனவும் கூறினார்.

இந்நிலையில், நீதிமன்ற வளாகங்களில் மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருப்பதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, இது போன்ற புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று கூறிய, டெல்லி நகர காவல் குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் டியோவுக்கும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் தொடர்பான பணிகள் எதையும், ராஜேஷ் டியோவுக்கு ஒதுக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே