முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியின சிறுவனை கொண்டு, தமது காலணியை கழற்ற வைத்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.
இங்குள்ள 26 வளர்ப்பு யானைகளுக்கான நல வாழ்வு முகாம் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தான் அணிந்திருந்த காலணியை கழற்றுமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
உடனே அந்த சிறுவன் அமைச்சரின் காலணியை கழற்றினான்.
அரசு அதிகாரிகள் முன்பு அமைச்சரே, பழங்குடியின சிறுவனை காலணியை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்துள்ள விளக்கத்தில், அந்த சிறுவனை தமது பேரனை போல் கருதியே அழைத்ததாக கூறியுள்ளார்.
இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.