ஓபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் வைத்திலிங்கம் பேட்டி..!

”அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் எனது ஆதரவு உண்டு, தற்போதைய குழப்பத்தால் ஆட்சி கலையாது ” என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த பின்னர் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று பரபரப்புக்கு இடையே சென்னையில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, உள்பட முக்கிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து கூறுவதற்கு அதிமுக நிர்வாகிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளரை இறுதி செய்வதில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் இருதரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியான 11 பேர் கொண்டு வழிகாட்டு குழுவை அமைக்க ஓபிஎஸ் தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தக் குழுவில் தன்னுடைய ஆட்கள் அதிகமாக இடம்பெறுவதற்கு ஈபிஎஸ் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு இடையே அதிமுக செயற்குழு கூடியது. 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் செயற்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த முதல்வர், துணை முதல்வர் இடையே யார் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து விவாதம் நடந்ததாக கூறப்பட்டது.

இந்த விவாதத்தில், ”என்னை முதல்வராக்கியது ஜெயலலிதா. உங்களை முதல்வராக்கியது சசிகலா என்று பன்னீர் செல்வம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாம் இருவரையும் முதல்வராக்கியது சசிகலாதான் என்று முதல்வர் பழனிசாமி கூறியதாகவும் கூறப்பட்டது.

ஆனால், விவாதம் மட்டுமே நடந்ததாகவும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது நேற்றைய கூட்டத்தில் முடிவாகவில்லை. அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

இந்த நிலையில் இன்று சென்னையில் முதல்வர் தலைமையில் நடந்து வரும் மாவட்டக் கலெக்டர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொள்ளவில்லை.

வழக்கமாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதுண்டு. இந்த நிலையில் இன்று வீட்டில் வைத்து தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

இவருடன் இன்று காலை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்தியலிங்கம் சந்தித்துப் பேசினர்.

இதற்குப் பின்னர் வெளியே வந்த வைத்தியலிங்கம் கூறுகையில், ”அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் எனது ஆதரவு உண்டு, தற்போதைய குழப்பத்தால் ஆட்சி கலையாது ” என்றார்.

கட்சி பணிகள் குறித்து மட்டுமே ஓபிஎஸ் உடன் ஆலோசனை மேற்கொண்டோம் என்று துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே